தேனி
சுருளிப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில்அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
|சுருளிப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுருளிப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயந்தி மாலா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் பேசும்போது, பொதுமக்கள், ஊராட்சியில் 11 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக கலெக்டரிடம் மனு கொடுத்து வருகின்றனர். மேலும் சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப்போவதாக ஒரு சுவரொட்டியும், ஊராட்சி சார்பில் 11 வார்டு உறுப்பினர்களின் பெயர் அச்சிடப்பட்ட சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது.
தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பிரச்சினையால் ஊராட்சி பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. இதனால் 11 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வதற்கு அதிகாரமில்லை, தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தீர்மான நோட்டில் பொதுமக்களின் கோரிக்கையை அவர் பதிவு செய்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.