தேனி
வைகை அணை நீர்த்தேக்கத்தில் 3 லட்சம் மீன்குஞ்சுகளை வளர்ப்புக்காக விடும் பணி தொடக்கம்
|வைகை அணை நீர்த்தேக்கத்தில் வளர்ப்புக்காக 3 லட்சம் மீன்குஞ்சுகளை விடும் பணி தொடங்கியது
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு்ள்ளனர். ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. வைகை அணையில் வளரும் மீன்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். இதனால் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பில் வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வைகை அணை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் 9 லட்சம் நுண்மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகளை வைகை அணை நீர்த்தேக்கத்தில் விடும் பணி இன்று நடைபெற்றது. இதனை மதுரை மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி தொடங்கி வைத்தார். புதிதாக மீன்கள் விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் சிறிய துளை கொண்ட வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.