ராணிப்பேட்டை
தாய் இறந்த சோகத்தில், மகன் சாவு
|பொன்னை அருகே, தாய் இறந்த சோகத்தில் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தாய் சாவு
வேலூர் மாவட்டம் பொன்னையை அடுத்த டி.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோசலை (வயது 80). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த கோசலை நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி அளவில் இறந்துவிட்டார்.
இவரது மகன் கார்த்திக் (46), தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். கார்த்திக் தனது தாய் இறந்த செய்தியை அவர்களுடைய உறவினர்களுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார்.
மகனும் சாவு
பின்னர் இரவு முழுவதும் தனது தாய் இறந்த சோகத்தில் சாப்பிடாமல் மனவேதனையில் இருந்துள்ளார். தாய் இறந்து விட்டாரே என்ற ஏக்கத்தில் இருந்த அவருக்கு நேற்று காலை சுமார் 9 மணி அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார்.
உடனே அவரது உறவினர்கள், அவரை தூக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இறந்த தாய், மகன் இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்தனர்.
ஒரே குடும்பத்தில் தாய், மகன் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.