தேனி
போடியில்காட்டெருமை தாக்கி விவசாயி பலி:1 கி.மீ. தூரம் தூக்கி சென்று வீசிய பரிதாபம்
|போடியில் காட்டெருமை தாக்கி 1 கி.மீ. தூரம் தூக்கி சென்று வீசியதால் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
காட்டெருமை தாக்கியது
போடி ஜமீன் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 63). விவசாயி. இவருக்கு போடி அருகே அருங்குளம் உலக்குரட்டி புலத்தில் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் காலை இவர், தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்டத்தில் வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது வனப்பகுதியில் ்இருந்து காட்டெருமை ஒன்று திடீரென வந்தது. இதைக்கண்டதும் முருகன் அலறியடித்து ஓடினார். ஆனால் காட்டெருமை அவரை விடாமல் துரத்தி சென்றது. ஒரு கட்டத்தில் காட்டெருமை அவரை கொம்பால் தாக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை காட்டெருமை கீழே போட்டு விட்டு ஓடியது.
விவசாயி பலி
இதில் கை, கால்களில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம்கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டக்காரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவரை சோதனை செய்தபோது காட்டெருமை தாக்கியதில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகர் போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரமானதால் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளதால் போலீசார், வனத்துறையினர் வரவில்லை.
இதையடுத்து நேற்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டெருமை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த முருகனுக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.