தேனி
போடியில்வேளாண்மை துறை அதிகாரி வீட்டில் திருட்டு
|போடியில் வேளாண்மை துறை அதிகாரி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போடி தேவர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). வேளாண்மை துறை அதிகாரி. கடந்த 8-ந்தேதி சரவணன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்றார். இதனால் வீட்டை பூட்டி சாவியை அதே பகுதியில் வசிக்கும் அவரது தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை சரவணனின் தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. ஆனால் நகை, பணம் ஏதும் திருடுபோகவில்லை. ஆனால் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் மட்டும் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.