< Back
மாநில செய்திகள்
ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்- மாநில கூட்டத்தில் வலியுறுத்தல்
மதுரை
மாநில செய்திகள்

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்- மாநில கூட்டத்தில் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என மாநில கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என மாநில கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுஜாதா வரவேற்றார். இதில், பொது செயலாளர் சுபின், மாநில பொருளாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செல்வராணி, மதுரை மாவட்ட செயலாளர் கே.நீதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்.ஆர்.பி.) போட்டி தேர்வின் மூலம் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை 2 வருடம் பணி நிறைவு பெற்றபின் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 7 வருடம் கடந்த நிலையில் வெறும் 4000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 4,500 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். இதுபோல், 2019-ம் ஆண்டு எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 2500 செவிலியர்கள் 3 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

தீர்மானம்

எனவே, ஒப்பந்த முறையின் பணி செய்யும் செவிலியர்களை, தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணியை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

இதுபோன்ற, கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் 3-ந்தேதி முதல்-அமைச்சருக்கு, அனைத்து செவிலியர்களும் அஞ்சல் அட்டை அனுப்புவது என்றும், 12 -ந்தேதி முதல் 20-ந்தேதி வரை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்குவது என்றும், டிசம்பர் மாதம் 16-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் செய்திகள்