தேனி
தேனி ரெயில் நிலையத்தில் உருவான குட்டையில்ஆபத்தை உணராமல் உற்சாக குளியல்:தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
|தேனி ரெயில் நிலையத்தில் உருவான குட்டையில் உயிரை பணயம் வைத்து உற்சாகமாக குளிக்க பலர் வந்து செல்வதால், உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடியில் இருந்து மதுரைக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. அந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றும் திட்டத்துக்காக கடந்த 2010-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ரெயில் நிலையம்
பின்னர் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி, தேனி, போடி ரெயில் நிலையங்களும் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளன.
இந்த ரெயில் பாதையில் மதுரை-போடி இடையே கடந்த ஆண்டு முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 19-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அது ஒருபுறம் இருக்க சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக தேனி ரெயில் நிலையத்தில் குட்செட் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
குட்செட்டால் உருவான குட்டை
இந்த குட்செட் தளம் தரைமட்டத்தில் இருந்து உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரெயில்வே நிலைய வளாகத்தின் வடக்கு பகுதியில் மண் எடுத்து பயன்படுத்தப்பட்டது. இதனால், அந்த இடத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு பெரிய பள்ளம் உருவானது. சுமார் 30 அடி ஆழத்தில் இந்த பள்ளம் உள்ளது. அதில் நீரூற்று ஏற்பட்டு அங்கு ஒரு குட்டை உருவாகி உள்ளது.
பல மாதங்களாக இந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்த குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீர் பார்க்க, பார்க்க ரசிக்கத் தூண்டும் வகையில் உள்ளது. இதனால், இங்கு உற்சாக குளியல் போடுதற்காக தினமும் பலர் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.
பலியான முதியவர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த குட்டை சில இடங்களில் ஆழம் குறைவாகவும், சில இடத்தில் அதிக ஆழமாகவும் உள்ளது. ஆபத்தை உணராமல் இங்கு பலர் குளிக்க வருவதால் வரும் காலங்களில் விபரீதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ரெயில்வே பணியாளர்கள் அவ்வப்போது இங்கு வந்து குளிப்பவர்களை விரட்டி விடுகின்றனர். இருப்பினும் பலர் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.
இந்த குட்டையை மூடுவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றதாகவே உள்ளது. அதை மூடும் அளவுக்கு பல ஆயிரம் யூனிட் மண் தேவைப்படும். எனவே இந்த குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து யாரும் உள்ளே செல்லாத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக தேனியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வேலி அமைக்க வேண்டும்
ஆண்டிச்சாமி (தேனி பஸ் நிலையத்தில் கடை நடத்துபவர்) :- ரெயில் நிலைய வளாகத்தில் உருவான குட்டையில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளிப்பதை பார்க்கவே பயமாக இருக்கிறது. சில மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். அப்போது இன்னும் அதிகம் பேர் வந்து குளிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு இங்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
ரெயில் நிலையத்துக்கு செல்லும் குட்செட் பாதை வழியாக தான் நிறையபேர் வருகிறார்கள். அந்த பாதையில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கலாம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் விடுமுறை நாட்களில் இதுபோன்ற இடங்களுக்கு செல்லாமல் இருக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். உயிர் போய்விட்டால் திரும்ப பெற முடியாது.
கண்காணிப்பு
ஜெயராம் (வர்த்தகர், தேனி) :- தேனியில் குட்செட் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் சரக்கு ரெயில் சேவையும் தொடங்கினால் மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் அதிபர்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில் குட்செட் அருகில் உருவாகி உள்ள குட்டையில் யாரும் நுழையாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றாடம் ஆபத்தான நாளாகவே இருந்து விடும்.
நீச்சல் தெரிந்த நபர்களுக்கே இது ஆபத்தான இடம் தான். நீச்சல் தெரியாத நபர்கள் ஆர்வ மிகுதியால் குளிக்க இறங்கினால் உயிரே போய்விடும் அபாயம் உள்ளது. இதை சுற்றி வேலி அமைக்க வேண்டும். அதுவரை தினமும் இங்கு யாரும் நுழையாமல் இருக்க போலீசார் அல்லது ரெயில்வே ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போதுமான எண்ணிக்கையில் எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகளும் அங்கு வைக்க வேண்டும்.
அறிவுரைகளை கேட்பதில்லை
சுரேஷ் (தேனி ரெயில் நிலைய வளாக வாகன காப்பகத்தில் கட்டணம் வசூலிப்பவர்) :- பள்ளி மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஆபத்தை உணராமல் இங்கு வருகிறார்கள். அவர்கள் குட்டையில் இறங்கி குளிப்பதை பார்க்கும் போதெல்லாம் அங்கிருந்து அவர்களை வெளியேற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கிறோம். ஆனாலும், மாணவர்கள், இளைஞர்கள் அந்த அறிவுரைகளை கேட்பதில்லை. இதற்கு நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.