
தேனி
'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில்2-வது கட்ட விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்:கலெக்டர் தலைமையில் நடந்தது

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் 2-வது கட்ட விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
கிராமப்புற பகுதிகளில் நீர், சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை குறித்து மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதம் வரை முதற்கட்ட விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2-வது கட்ட விழிப்புணர்வு பிரசாரம் வருகிற மே 1-ந்தேதி தொடங்கி, ஜூன் 15-ந்தேதி வரை நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தின் போது, கிராமப்புற பகுதிகளில் 2-ம் கட்ட விழிப்புணர்வு பிரசாரங்களை அதிக இடங்களில் நடத்துவது, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கலெக்டர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாத்துரை, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.