< Back
மாநில செய்திகள்
வலைகளை சீரமைக்கும் பணியில்   மீனவர்கள் தீவிரம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

தினத்தந்தி
|
26 May 2022 11:27 PM IST

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண தொகை வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம்:

வலைகளை சீரமைக்கும் பணிகள்

ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை காலம் 61 நாட்கள் நீடிக்கும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையேற்றி சிறு, சிறு பழுதுகளை சரி செய்யும் பணியிலும் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகளை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக வெறிச்சோடி காணப்பட்டன மீன்பிடி தளங்கள் தற்போது கூட்டம் அதிகமாக காணப்பட்டு களைகட்ட தொடங்கியுள்ளது.

நிவாரண தொகை வழங்க வேண்டும்

மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக அரசு சார்பாக மீனவர்கள் தடைக்கால நிவாரண தொகையாக வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படும். ஆனால் தற்போது வரை மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை அதனை அரசு உடனே வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தருவதாக அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குமாறு இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்