< Back
மாநில செய்திகள்
கொட்டும் மழையில், வயல் வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கொட்டும் மழையில், வயல் வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்

தினத்தந்தி
|
8 Nov 2022 12:15 AM IST

கொட்டும் மழையில், வயல் வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்

சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் கொட்டும் மழையில் வயல் வழியாக இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுடுகாட்டிற்கு சாலைவசதி இல்லை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் 3 பாசனவாய்க்கால் செல்கிறது. இந்த 3 வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறும், சகதியும் நிறைந்த வயல்வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் நிலை உள்ளது.

மேலப்பனையூர் தெற்கு தெரு சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் வாட்டர் தார்ச்சாலையில் இருந்து சுடுகாடு வரை உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து தார்ச்சாைல போட்டு தர வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்

இந்தநிலையில் கோட்டூரில் நேற்று கனமழை பெய்தது. அப்போது இறந்தவரின் உடலை கொட்டும் மழையில் நனைந்து கொண்டு வயல்வழியாக சுடுகாட்டிற்கு அப்பகுதி மக்கள் சுமந்து சென்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேலபனையூர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வன்னித்திடல் என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டில் மயான கொட்டகை அமைத்து அதற்கு வாட்டர் மெயின் ரோட்டில் இருந்து மண்சாலை அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலை முற்றிலும் அழிந்தன. சாலையின் குறுக்கே செல்லும் 3 பாசன வாய்க்காலில் பாலம் இல்லை.

கலெக்டருக்கு மனு

இதனால் மழை காலங்களில் எங்கள் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு அவதிப்பட்டு வருகின்றோம். எனவே சுடுகாட்டிற்கு செல்ல தார்ச்சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளோம் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்