கடலூர்
செயற்பொறியாளர் அலுவலகங்களில்மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம்
|கடலூர் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் மாதந்தோறும் மின்நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோட்ட அளவிலான கூட்டம்
கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம், அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகங்களில் மாதந்தோறும் நடைபெற உள்ளது. அதாவது கடலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை அன்றும், குறிஞ்சிப்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையும், சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்றும் மின்நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மின்சாரம் தொடர்பான குறைகள்
இதேபோல் விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமையும், பண்ருட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3-வது செவ்வாய்க்கிழமை அன்றும், திட்டக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3-வது வியாழக்கிழமையும், நெல்லிக்குப்பம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 4-வது செவ்வாய்க்கிழமை அன்றும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். எனவே மின் நுகர்வோர், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மின்சாரம் தொடர்பான அனைத்து விதமான குறைகளையும், மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.