மதுரை
விழாக்கள் என்ற பெயரில் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி
|விழாக்கள் என்ற பெயரில் வனத்தை குப்பைக்காடாக மாற்றுகிறார்கள் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
நவராத்திரி திருவிழா
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனவே, நவராத்திரி திருவிழாவை 3 நாட்கள் தங்கியிருந்து கொண்டாட அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, "சதுரகிரி மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட புலிகள் வனப்பகுதியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் 3 நாட்கள் தங்க அனுமதிக்க முடியாது. ஒரு நாள் தங்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு இருந்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் சார்பில், "சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், புலிகள் சரணாலய பகுதியாகவும் இருப்பதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது" என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்ததால் மாற்று வழியில் வனத்திற்குள் நுழைந்து சமைத்ததில் காட்டுத்தீ ஏற்பட்டு வனவிலங்குகளும், மரங்களும் பாதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத கட்டுமானம்
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு பொறுப்பே இல்லாமல் வனத்தை குப்பைகளாக்கி செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பது, அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல குவித்து விட்டு செல்வதுதான் வாடிக்கையாக நடக்கிறது. எத்தனை கோவில் நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் வனத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு அங்குள்ள குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளீர்கள்? வனத்தில் உள்ள கோவில்களில் என்ன நடக்கிறது என்பது கோர்ட்டுக்கு நன்றாக தெரியும். அன்னதானம் செய்கிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்வதுடன், கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள். இந்த வனப்பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதியளித்தது எப்படி? எனவே, இந்த வழக்கில் மதுரை, விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுகளை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.