சென்னை
கடந்த 48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
|சென்னையில், கடந்த 48 மணி நேரத்தில், 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் தொகுதி, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி, டி.எல்.எப். பகுதி, செம்மொழி பூங்கா சாலை, துரைப்பாக்கம் சதுப்பு நில பகுதி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சி ரூ.1,327.44 கோடி செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ரூ.82.15 கோடி செலவிலும், நீர்வளத்துறை ரூ.434.22 கோடி செலவிலும், நெடுஞ்சாலைத்துறை ரூ.229.76 கோடி செலவிலும் கொசஸ்தலையாறு கரையோர பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 220 கோடி செலவிலும், கோவளம் கரையோர பகுதிகளில் ஆயிரத்து 714 கோடி ரூபாய் செலவிலும், உலக வங்கியிடம் இருந்து ரூ.120 கோடி என்று ஆக மொத்தம் ரூ.7 ஆயிரத்து 127.57 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை ரூ.2 ஆயிரத்து 73.57 லட்சம் செலவில் பணிகள் நடந்து முடிவடைந்துள்ளது. 220 கிலோ மீட்டர் நீளத்துக்கான மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியில் 157 கி.மீ. தூரத்துக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.
சென்னையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 முதல் 35 சென்டி மீட்டர் வரையிலான மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. மேலும் 90 சதவீத வெள்ள பாதிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகர எல்லைக்குள் சீத்தம்மாள் காலனி, தியாகராய சாலை, பனகல் சாலை, விருகம்பாக்கம் பகுதியில் ராமசாமி சாலை, பி.டி. ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, டபுள் டேங்க் ரோடு, சைதாப்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் சாலை, சுப்பிரமணியம் சாலை மற்றும் வேளச்சேரியில் டான்சி நகர், இந்திரா நகர் போன்ற பல்வேறு இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதால் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சியின் 15-வது மண்டல சிறப்பு அலுவலர் வீரராகவராவ், 14-வது மண்டல சிறப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.