'கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் பேர் அரசு பள்ளியை நாடி வந்துள்ளனர்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
|கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் விழா நடைபெற்றது. ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தபடவில்லை என்றும், அரசாணை 149 தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முடிவு எடுக்கப்படும் போது போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் சி.ஏ.ஜி. அறிக்கையின்படி கடந்த ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் 511 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்நிலைப்பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களின் விகிதம் குறைந்திருந்ததாகவும், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்துள்ளனர் என்று சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுவதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.