< Back
மாநில செய்திகள்
செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டனர்- ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல்
மதுரை
மாநில செய்திகள்

செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டனர்- ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:54 AM IST

செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டது குறித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது


ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் தனியார் நிறுவனம் ஒன்று, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருச்சி துறையூரை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மலிவு விலையில் செல்போன் தருவதாக வந்த தகவலை பார்த்து அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்ட போது, கட்டணம் கேட்டுள்ளனர். அதனை நம்பிய அவர் ரூ.8,475 பணத்தை அந்த நிறுவனம் அனுப்பிய கியூ.ஆர். கோடு மூலம் அனுப்பினார். ஆனால், செல்போன் வராததால் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து பணம் சென்ற வங்கிக்கணக்கு மும்பையில் உள்ள ஒரு வங்கிக்கானது என்பதை கண்டறிந்தனர்.

இதைதொடர்ந்து, அந்த வங்கிக்கணக்கை முடக்க வங்கிக்கு கடிதம் அனுப்பினர். அதன்படி அந்த வங்கியில் உள்ள எங்களது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கணக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு நடத்தும் எங்களது நிறுவனத்துக்கு சொந்தமானது. வேண்டுமென்றே எங்களது வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தும் வகையில் யாரோ ஏற்பாடு செய்துள்ளனர். பண மோசடிக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, திருச்சி சைபர் கிரைம் போலீசாரின் வேண்டுகோளின்படி முடக்கப்பட்ட எங்களது நிறுவனத்தின் வங்கிக்கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிய உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்