2022-23 நிதி ஆண்டில்; இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.5,282 கோடி
|2022-23 நிதி ஆண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.5 ஆயிரத்து 282 கோடியாகும். இது முந்தைய ஆண்டை விடவும் 34 சதவீதம் அதிகம்.
சென்னை,
கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,447 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.984 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு 4-வது காலாண்டில் ரூ.4 ஆயிரத்து 255 கோடியாக இருந்த நிகர வட்டி வருவாய், தற்போதைய காலாண்டில் ரூ.5 ஆயிரத்து 508 கோடியாக உயர்ந்துள்ளது. இது 29 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று 2022-ம் ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.2 ஆயிரத்து 738 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம் தற்போதைய காலாண்டில் ரூ.4 ஆயிரத்து 16 கோடியாக உயர்ந்துள்ளது.
நிகர லாபம்
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் (2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை) இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.5 ஆயிரத்து 282 கோடியாக உள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 945 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 34 சதவீதம் அதிகம் ஆகும்.
2022-ம் ஆண்டு நிதி ஆண்டில் நிகர வட்டி வருவாய் ரூ.16 ஆயிரத்து 728 கோடியாகும். இது கடந்த ஆண்டு 21 சதவீதம் அதிகரித்து, ரூ.20 ஆயிரத்து 225 கோடியாக உள்ளது. இதேபோல, செயல்பாட்டு லாபம் ரூ.12 ஆயிரத்து 717 கோடியில் இருந்து ரூ.15 ஆயிரத்து 271 கோடியாக அதிகரித்துள்ளது.
வைப்புத்தொகை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்து, ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 166 கோடியாக உள்ளது. இந்தியன் வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 243 கோடியில் இருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 752 கோடியாக உள்ளது.
நோக்கம்
இதுகுறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சாந்திலால் ஜெயின் கூறும்போது, ''ஊழியர்களின் புத்திசாலித்தனம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொழில்நுட்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதே எங்களுடைய நோக்கம்'' என்றார்.