தேனி
மாவட்டத்தில்8 கி.மீ. தூரம் நடந்து சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
|தேனி மாவட்டத்தில் 8 கி.மீ. தூரம் நடந்து சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் நடைபயிற்சி
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூரில் தொடங்கி கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, அய்யனார்புரம் விலக்கு, கோட்டைப்பட்டி வழியாக அரண்மனைப்புதூர் வரை 8 கிலோமீட்டர் தூர சாலையை ஆரோக்கிய நடைபயிற்சிக்கான பாதையாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த நடைபாதையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாலையில் நடைபயிற்சி செய்து ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 6 மணியளவில் அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அவர் நடைபயிற்சியை தொடங்கினார். 8 கி.மீ. தூர பாதையில் முழுமையாக ஆய்வு செய்து காலை 7.30 மணியளவில் நடைபயிற்சியை நிறைவு செய்தார்.
அமைச்சர் இ.பெரியசாமி
அதன்பிறகு டொம்புச்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் அங்கிருந்தபடியே, கொட்டக்குடி, ஜங்கால்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர்கள் வழங்கினர்.
ஒரே ஆண்டில் 239 விருதுகள்
விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் மருத்துவத் துறை மேம்பாட்டுக்கு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அரண்மனைப்புதூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் நவீன நரம்பியல் ஆய்வு மையத்துக்கு உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆஸ்பத்திரிகளுக்கு தர உறுதி நிர்ணய விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு 239 விருதுகள் கிடைத்துள்ளன. அதில் தேனி மாவட்டம் 4 விருதுகள் பெற்றுள்ளது. இதேபோல், மகப்பேறு சிகிச்சை பிரிவு தொடர்பாக மத்திய அரசு வழங்கும் லக்சயா விருதை தேனி மாவட்டத்தில் கம்பம் அரசு ஆஸ்பத்திரி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புறநோயாளிகள் அதிகரிப்பு
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், 'தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில், மீண்டும் மருத்துவ சேவை தொடங்க கோரிக்கை வந்துள்ளது. முதல்-அமைச்சரிடம் கருத்து கேட்டு மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் ஒரு மடங்கு புறநோயாளிகள் வந்து கொண்டு இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 2, 3 மடங்காக உயர்ந்து இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவையை மக்கள் பெரிதாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ச்சியாக மருத்துவ கட்டமைப்புகளை பெருக்கிக் கொண்டு இருக்கிறோம்' என்றார்.
பின்னர் ராஜதானியில் நடந்த விழாவில், ஹைவேவிஸ், ராஜதானி பகுதிகளில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த விழாக்களில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.