நீதிமன்ற கழிவறையில், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி.. குமரியில் பரபரப்பு
|கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அருள்பாரதி என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜன் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜனை மாதத்திற்கு இருமுறை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ராஜனை இரண்டு போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்தனர்.
அப்போது கழிவறைக்கு செல்லவேண்டும் என ராஜன் கூறியதால், அவரை கழிவரைக்கு அனுப்பிவைத்தனர். கழிவறைக்கு சென்ற ராஜன், கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தான் மறைத்துவைத்திருந்த பிளேடை கொண்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பார்த்ததில், ராஜன் துடிதுடித்துக்கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.