< Back
மாநில செய்திகள்
பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரி அமுதா இன்று 2-ம் கட்ட விசாரணை..!
மாநில செய்திகள்

பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரி அமுதா இன்று 2-ம் கட்ட விசாரணை..!

தினத்தந்தி
|
17 April 2023 1:49 AM IST

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணையை இன்று மற்றும் நாளை நடத்துகிறார்.



நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்று யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா தனது 2-வது கட்ட விசாரணையை 17, 18-ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) நடத்துகிறார். பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விசாரணை அதிகாரியிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர்கள் 17, 18-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாலுகா அலுவலகத்தில் ஆஜராகி தெரிவிக்கலாம்.

பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருந்தாலும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி புகார் அளிக்கலாம். செல்போன் எண் நேரில் வரமுடியாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 82488 87233 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ புகார் தெரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்