தேனி
கஞ்சா வழக்கில்4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கஞ்சா வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கஞ்சா கடத்தல்
கடமலைக்குண்டு போலீசார் கடந்த மாதம் 23-ந்தேதி அய்யனார் கோவில் அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து 60 கிலோ கஞ்சா கடத்தி வந்த, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருேக உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை (வயது 28), புதுக்கோட்டை மாவட்டம் வண்டிச்சிபாளையத்தை சேர்ந்த ராஜா (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் நல்லமலை, ராஜா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு மதுரை மத்திய சிறை போலீசாரிடம் வழங்கப்பட்டது.
குண்டர் சட்டம்
கூடலூரில் கடந்த மாதம் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற கூடலூர் அரசமரம் தெருவைச் சேர்ந்த பிரபு (38), கூடலூர் வடக்குரதவீதியை சேர்ந்த முருகேஸ்வரி (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தேனி கலெக்டர் ஷஜீவனாவுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன், மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.