< Back
மாநில செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது

தினத்தந்தி
|
22 July 2023 1:59 PM IST

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜார் வீதி மொளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (வயது 32). செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த செல்போன்கள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அப்துல் ரஹ்மான் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆட்டோவில் வந்த 3 பேர் இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பதும், இருவர் முகத்தை மறைத்து கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணிப்பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் செல்போன் திருட்டில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

இது சம்பந்தமாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

செல்போன்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் திருட்டில் தொடர்புடையதாக ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டம், நூ கிராமத்தை சேர்ந்த ஹமீத் ஹூசைன் (வயது 35), நஹர்பூர் கிராமத்தை சேர்ந்த இர்பான் (28), ஜபித் (25), அலிஜான் (50) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 234 செல்போன்கள் கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்