திருச்சி
விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில்1¼ டன் ரேஷன் அரிசி சிக்கியது
|விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில் 1¼ டன் ரேஷன் அரிசி சிக்கியது
சமயபுரம் அருகே விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில்
1¼ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி
சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலை பாலம் அருகே நேற்று அதிகாலை ஒரு சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. சமயபுரம் போலீசார் அந்த வாகனத்தை மீட்க சென்ற போது, அதில் 25 வெள்ளை சாக்கு மூட்டைகளில் 1¼ டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரியவந்தது.
உடனே அவர்கள் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். திருச்சி தாராநல்லூரை சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் மட்டும் சிக்கினார். குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோழிபண்ணைக்கு...
விசாரணையில், தப்பி ஓடியது மண்ணச்சநல்லூரை சேர்ந்த விக்னேஷ் என்பதும், ரேஷன் அரிசியை காந்தி மார்க்கெட், கூத்தூர் ஆகிய இடங்களில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து பெற்று திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சண்முகம் என்பவர் மூலமாக நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகனை கைது செய்த போலீசார், 1¼ டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சண்முகம், விக்னேஷ் ஆகியேரை போலீசார் தேடி வருகிறார்கள்.