தேனி
ஆண்டிப்பட்டியில்கிணற்றில் விழுந்த காட்டு பூனை மீட்பு
|ஆண்டிப்பட்டியில் கிணற்றில் விழுந்த காட்டு பூனை மீட்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி தபால் நிலைய தெருவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 3 நாட்களாக பூனை கத்தும் சத்தம் கேட்டது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றை எட்டிப்பாா்த்தனர். அப்ேபாது கருப்பு நிற காட்டுப்பூனை ஒன்று குப்பைகளுக்கு இடையே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஒரு வாளியில் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறக்கி பூனையை மீட்க முயற்சித்தனர்.
ஆனால் சாவின் விளிம்பில் உயிர் பயத்தில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பூனை அச்சப்பட்டு கொண்டு வாளிக்குள் வரவில்லை. இதனையடுத்து தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றில் இறங்கி மீட்பு கருவியின் மூலம் பூனையை பிடித்து வாளிக்குள் போட்டார். பின்னர் உடனடியாக கிணற்றின் மேலே இருந்தவர்கள் வாளியை மேலே தூக்கி பூனையை கிணற்றிற்கு வெளியே விட்டனர். கிணற்றை விட்டு வெளியே வந்ததும் வாளியிலிருந்து தாவிக்குதித்து தரைப்பகுதிக்கு வந்த சுமார் 3 அடி நீள காட்டுப்பூனை மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது.