தஞ்சாவூர்
தஞ்சையில், ரூ.133½ கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
|பொலிவுறு நகரம் திட்டத்தில் தஞ்சையில் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொலிவுறு நகரம் திட்டத்தில் தஞ்சையில் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.133½ கோடியில் திட்ட பணிகள்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொலிவுறு நகரம்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்ததையடுத்து இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இந்த விழா நடந்தது. அமைச்சரகள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார்.
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவடைந்த திட்டப்பணிகளை ரிமோட் மூலம் திறந்து வைத்தார். ரூ.61.79 கோடியில் கட்டப்பட்ட மாநாட்டு மைய கட்டிடம், ரூ.10.46 கோடி செலவில் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலைய வளாகம், ரூ.15.69 கோடியில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் நிலையத்தை திறந்து வைத்தார். தஞ்சை மாநகராட்சியில் உள்ள 14 பள்ளிகளை ரூ.7.32 கோடியில் தொடுதிரை வசதி, கணினி, குளிர்சாதன வசதி என சீர்மிகு பள்ளிகளாக மாற்றப்பட்டதையும் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பூங்கா, ரூ.15.61 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காந்திஜி வணிக வளாகம், ரூ.2.25 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட கருணாசாமி கோவில் குளம், ரூ.1.44 கோடியில் மேம்படுத்தப்பட்ட அழகிகுளம், ரூ.3 கோடியில் கட்டப்பட்ட அண்ணாசாலை வணிக வளாகம், ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
நோயாளி உடனிருப்போர் தங்குமிடம்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடியில் நோயாளிகள் உடனிருப்போர் தங்குமிடம் கட்டிடம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் வார்டு அருகில் ரூ.1.50 கோடியிலும், தீப்புண் வார்டு அருகில் ரூ.1.50 கோடியிலும் கட்டப்பட்டுள்ள நோயாளியின் உடனிருப்போர் தங்குமிட கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மொத்தம் ரூ.133.56 கோடி மதிப்பில் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பொது நிதியில் ரூ.1 கோடியில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிவசங்கர், ஆ.ராசா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நன்றி கூறினார்.