< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தினத்தந்தி
|
21 Oct 2023 2:28 AM IST

ஆயுதப்பூஜையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்திருந்தது. இதனால் மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.

ஆயுதப்பூஜை

தஞ்சை விளார் சாலையில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. தஞ்சை மார்க்கெட்டுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

பண்டிகை காலங்கள், சுபமூகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதேபோல மழை காலக்கட்டத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் வரத்து குறைவாக இருக்கும். இதன் காரணமாகவும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். இந்தநிலையில் ஆயுதப்பூஜை வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

பூக்கள் விலை உயர்வு

இதையொட்டி தஞ்சை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்து காணப்பட்டாலும் மக்கள் அதிகஅளவில் வந்து வாங்கி சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விலை உயர்வு காரணமாக தஞ்சை பூ மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் ரூ.500 விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. அதேபோல் ரூ.300 விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1000-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட காட்டுமல்லி ரூ.1000-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.300-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட செண்டிப்பூ ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.60-க்கு விற்பனையான ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்கப்பட்டது. இதேபோல் அரளி, மருக்கொழுந்து உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவும், ஆயுதப்பூஜையையொட்டியும் பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. விலை உயர்ந்து இருந்தாலும் மக்கள் அதிகஅளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் விற்பனையும் நன்றாக இருந்தது. பூக்களின் விலை இன்னும் உயரும் என்றனர்.

மேலும் செய்திகள்