தஞ்சாவூர்
தஞ்சையில், 1.400 ஆண்டுகள் பழமையான கோவில் குளம் ரூ.2.15 கோடியில் புனரமைப்பு
|தஞ்சை கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவில் குளம் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளத்தில் உள்ள 9 உறைகிணறுகளையும் பராமரிக்க மேயர் சண்.ராமநாதன் உத்தரவிட்டார்.
தஞ்சை கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவில் குளம் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளத்தில் உள்ள 9 உறைகிணறுகளையும் பராமரிக்க மேயர் சண்.ராமநாதன் உத்தரவிட்டார்.
கருணாசாமி கோவில் குளம்
தஞ்சை கரந்தையில் கருணாசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இந்த குளம் 5½ ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கருங்குஷ்ட நோயினால் அவதிக்கப்பட்ட சோழமன்னன் இந்த குளத்தில் குளித்த போது மன்னனுக்கு இருந்த குஷ்ட நோய் சிவபெருமானின் கருணையால் நீங்கியதாக கூறப்படுகிறது.
தஞ்சை வடவாற்றில் இருந்து பூமிக்கு அடியில் சுரங்க நீர்வழிப்பாதை மூலம் இந்த குளத்துக்கு தண்ணீர் வரும். பல ஆண்டுகளாக இந்த கோவில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
ரூ.2.15 கோடியில் புனரமைப்பு
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்பகுதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.
இதைதொடர்ந்து இந்த குளத்தை புனரமைத்து அழகுபடுத்த மாநகராட்சி முடிவு செய்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
மேயர் ஆய்வு
இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் குளத்தில் புனிதநீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சையில் 40 குளங்கள் உள்ளன. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசாமி கோவில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும் குளத்தில் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குளம் 1,400 ஆண்டு பழமையானது என்பதால் இதன் புனிதத்தை பாதுகாக்க தேவையானநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரந்தையில் ஜைனகுளம், குஜிலியன்குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது"என்றார்.
ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் புண்ணியமூர்த்தி, கவுன்சிலர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.