தஞ்சாவூர்
தஞ்சையில், அருங்காட்சியக நடைபயணம்
|சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி தஞ்சையில் அருங்காட்சியக நடைபயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி தஞ்சையில் அருங்காட்சியக நடைபயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அருங்காட்சியக நடைபயணம்
தஞ்சை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரசுவதி மகால் நூலகம் மற்றும் கலைக் கூடத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அதன்படி முதல் நாளான நேற்று தஞ்சை கலைக்கூடத்தில் அருங்காட்சியக நடைபயணம் நடைபெற்றது. கலைக்கூடத்தில் உள்ள கல் மற்றும் பஞ்சலோக சிற்பங்களின் சிறப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மூத்த சுற்றுலா வழிகாட்டி பேராசிரியர் ரங்கராஜன் விளக்கம் அளித்தார். மேலும் அருங்காட்சியகத்தில் உள்ள திமிங்கல எலும்புக்கூடு, கற்சிற்பங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டன.
பண்டைய கால பொருட்கள்
மேலும் தஞ்சை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் சார்பில் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் பண்டைய கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனையும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கலைக்கூட காப்பாளர் சிவக்குமார், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகர், இன்டாக் பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஆசிரியை தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.