< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், வெறிச்சோடிய இறைச்சி-மீன் கடைகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், வெறிச்சோடிய இறைச்சி-மீன் கடைகள்

தினத்தந்தி
|
22 Aug 2022 12:50 AM IST

தஞ்சையில், வெறிச்சோடிய இறைச்சி-மீன் கடைகள்

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதத்தையொட்டி தஞ்சையில் நேற்று இறைச்சி-மீன் கடைகளில் அசைவ பிரியர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இறைச்சி-மீன் கடைகள்

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி, கோழிக்கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பதுடன், பக்தர்கள் விரதம் இருந்து தரிசனம் செய்வதால் மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சியின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

ஆவணி ஞாயிறு விரதம்

ஆடிமாதம் முடிவடைந்த நிலையில் ஆவணி மாதத்தில் இறைச்சியின் விற்பனை அதிகரிக்கும் என இறைச்சி வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்வதால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் மற்றும் கோழிக்கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட குறைந்த அளவிலான அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி, கோழிக்கறி வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்