ஈரோடு
தமிழகத்தில் மின் கட்டணத்தை குறைக்க முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோபியில் முத்தரசன் பேட்டி
|தமிழகத்தில் மின் கட்டணத்தை குறைக்க முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறினார்.
கடத்தூர்
தமிழகத்தில் மின் கட்டணத்தை குறைக்க முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறினார்.
பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தமிழகத்தில் தொடங்கி, முதல் தமிழக மாநில செயலாளராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு கோபியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விலைவாசி
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட மகத்தான தேசமாக இந்தியா இருக்கிறது. ஆனால் இந்த மகத்தான கொள்கைக்கு எதிராக, மக்களின் ஒற்றுமைக்கு எதிராக இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்தக்கூடிய பா.ஜ.க. அரசு, மதவெறி, ஜாதி வெறி, மொழி வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்துகிற மிக மோசமான மிக பிற்போக்குத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து உள்ளது. நிர்ப்பந்தங்கள், நெருக்கடிகள் மற்றும் மானியங்களை கொடுக்க மாட்டோம் என்று மத்திய அரசு கூறிய காரணத்தால் மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது.
மின் கட்டணத்தை குறைக்க...
சலுகைகள் இருந்தாலும் மின்கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். எனவே மாநில அரசு குறிப்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை பரிசீலித்து மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். வகுப்புவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. ஆதரிக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அவைகளுக்கும் இடமில்லை
இவ்வாறு அவர் கூறினார்.