நாமக்கல்
தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது
|தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி நாராயணசாமி பேட்டி அளித்தார்.
மத்திய இணை மந்திரி நாராயணசாமி ஆய்வு
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி ஆய்வு செய்தார். முன்னதாக நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டியில் ரூ.57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தை மத்திய மந்திரி நாராயணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளிபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் கிராம செயலகத்தையும், ரூ.11 லட்சத்து 97 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் மத்திய மந்திரி பார்வையிட்டார்.
குடிநீர் இணைப்புகள்
பின்னர் வள்ளிபுரம் அருகே உள்ள புலவர்பாளையத்தில், ரூ.32 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல்-ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதையும், ரூ.2.40 லட்சத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் மத்திய இணை மந்திரி நாராயணசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மத்திய இணை மந்திரி நாராயணசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., கலெக்டர் டாக்டர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்து உளள்து. மேலும் அந்த திட்டங்களுக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிறந்த நிறுவனங்களின் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் குழுவை கொண்டு ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு மத்திய இணை மந்திரி நாராயணசாமி கூறினார்.
இந்த ஆய்வுகளின்போது மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.