தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி - திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
|தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கலில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார்.
ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.