< Back
மாநில செய்திகள்
மாவட்டம் முழுவதும் பள்ளிகளில்கல்வி வளர்ச்சி நாள் விழா
தேனி
மாநில செய்திகள்

மாவட்டம் முழுவதும் பள்ளிகளில்கல்வி வளர்ச்சி நாள் விழா

தினத்தந்தி
|
16 July 2023 12:15 AM IST

தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கல்வி வளர்ச்சி நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா, நேற்று கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு பிரியாணி

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு கவுன்சிலர் கடவுள் தலைமை தாங்கி காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், அவர் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பிரியாணி, இனிப்பு வழங்கி காமராஜர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை பாண்டிலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜிதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனி அருகே வாழையாத்துப்பட்டி, அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியை வசந்தவள்ளி பரிசு வழங்கினார். காமராஜர் நம் நாட்டிற்கு ஆற்றிய பணிகளை ஆசிரியர் கருப்பசாமி விளக்கி கூறினார். இந்த விழாவில் ஆசிரியைகள் கவுரி, பாரதி மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்