தென்காசி
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
|செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நகராட்சி அலுவலக மேற்பார்வை ஊழியர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. தென்காசி யூனியன் முன்னாள் தலைவரான இவர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.
இவர்களுடைய மகன் ராஜேஷ் (வயது 25). திருமணமாகாத இவர், செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வை ஊழியராக பணியாற்றி வந்தார்.
வெட்டிக்கொலை
ராஜேஷ் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் காலை 10.45 மணியளவில் அங்கிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக ராஜேஷ் அதன் மீது அமர்ந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று ராஜேஷை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ராஜேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே, செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்த ராஜேஷின் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்களை போலீசார் செங்கோட்டை மேலபஜார் வழியாக திருப்பி விட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
உடனே, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகளை உடனே கைது செய்வதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மறியலை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கோட்டையில் நகராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர், அவர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்றும், அவரை கொன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.