சென்னை
ராயபுரத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.8½ லட்சம் வழிப்பறி
|ராயபுரத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.8½ லட்சம் வழிப்பறி செய்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, டி.கே.பி. தெருவைச் சேர்ந்தவர் முகமத் தமீம் (வயது 29). இவர், தன்னுடைய உறவினரான சாதிக் என்பவர் கொடுத்த ரூ.8½ லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராயபுரம், எம்.எஸ்.கோவில் தெரு அருகே சென்றபோது, 2 மர்ம நபர்கள் முகமத் தமீக்கை வழிமறித்து, கத்தியால் அவரது கையில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த ரூ.8½ லட்சத்தை பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), கொருக்குப்பேட்டையை சேர்ந்த கருணா (26) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் வங்கியில் டெபாசிட் செய்ய பணம் எடுத்து வந்த முகமத் தமீமை நோட்டமிட்டு, பின் தொடர்ந்து வந்து, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.