ராமநாதபுரம்
ராமேசுவரத்தில், அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம்
|ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அடிப்படை வசதிகள் கோரி
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க கோரியும், வெளி மாநிலங்களில் இருந்து கங்கை தீர்த்தத்தை வைத்து பூஜை செய்யும் இடத்தை இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்து அதே இடத்தில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், ஸ்படிகலிங்க தரிசன கட்டணம் 200-ஐ ரத்து செய்து சாமி தரிசனத்திற்கு செல்லும் இலவச பாதையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தரிசனம் செய்வதற்கு தனி பாதை அமைத்து தர வலியுறுத்தியும், கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகளை உடனடியாக செய்து தர கோரி நேற்று அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ம.தி.மு.க. கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கராத்தே பழனிச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் ராஜீவ் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர் செயலாளர் செய்யது இப்ராம்சா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு முருகானந்தம், ம.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சுகநாதன், நகர் செயலாளர் வெள்ளைச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெரோன்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மீனவர் அணி தலைவர் சகாயராஜ், நிர்வாகி தமிழரசி மற்றும் யாத்திரை பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.