ராமநாதபுரம் தொகுதியில் 'பஜ்ஜி' சுட்டு ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு
|சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் தனது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். தினமும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய வாரியாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இவ்வாறு இன்று பிரசாரத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.
அப்போது அந்த கடையில் பஜ்ஜி சுடுவதற்காக பலகார மாஸ்டர் தயார் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவுவதற்காக சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே தயாராக இருந்த பஜ்ஜி மாவில் வாழைக்காய்களை தோய்த்து எண்ணையில் போட்டு பஜ்ஜி சுட்டார்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடை முன்பு குவிந்தனர். அவர்களிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம், தான் ஆரம்ப காலத்தில் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்ததை குறிப்பிட்டு, பழையதை என்றும் மறக்கவில்லை என்று கூறினார். தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.