திருவள்ளூர்
பூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் அவதி
|பூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பூனிமாங்காடு, நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, நெமிலி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் பூனிமாங்காடு அரசு பள்ளி வளாகம், மற்றும் வகுப்பறைகள் முழுமையாக மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வகுப்பறைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும், பள்ளி வளாகத்தில் தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.