< Back
மாநில செய்திகள்
பெருந்துறை சிப்காட்டில் கழிவுகள் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளுக்கு பூட்டு
ஈரோடு
மாநில செய்திகள்

பெருந்துறை சிப்காட்டில் கழிவுகள் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளுக்கு பூட்டு

தினத்தந்தி
|
20 Sep 2023 9:25 PM GMT

பெருந்துறை சிப்காட்டில் கழிவுகள் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளுக்கு பூட்டு போடப்பட்டது.

பெருந்துறை சிப்காட்டில் கழிவுகளை வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளுக்கு பூட்டு போட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சிப்காட்டில் சோதனை

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற் பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி பாலத்தொழுவு குளம் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து தலா 3 அதிகாரிகள் கொண்ட 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை அதிரடியாக அனைத்து தொழிற்சாலைகளிலும் சோதனை செய்தனர்.

4 தொழிற்சாலைகளுக்கு பூட்டு

சோதனை முடிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். அதன்பேரில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள 3 சாய தொழிற்சாலைகள் மற்றும் ஒரு ரசாயன தொழிற்சாலையை மூடி பூட்டுப்போட சென்னை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த 4 தொழிற்சாலைகளுக்கும் மின்சார இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை

சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களும், அந்தந்த ஆலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் இயக்க வேண்டும்.

சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன. தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்