< Back
மாநில செய்திகள்
ஊராட்சி அலுவலகங்களில்  தலைவர்களை தவிர மற்றவர்கள் தேசியகொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை:  கலெக்டர் எச்சரிக்கை
தேனி
மாநில செய்திகள்

ஊராட்சி அலுவலகங்களில் தலைவர்களை தவிர மற்றவர்கள் தேசியகொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
12 Aug 2022 9:56 PM IST

தேனி மாவட்டத்தில் ஊராட்சி அலுவலகங்களில் தலைவர்களை தவிர மற்றவர்கள் தேசிய கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியகொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதில் வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சிகளில் தேசியகொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஊராட்சிகள் உதவி இயக்குனரை 7402608013 என்ற செல்போன் எண் அல்லது 04546-262729 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தேசியகொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. 130 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்