< Back
மாநில செய்திகள்
பாம்பனில், விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணி தீவிரம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாம்பனில், விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
20 May 2022 11:53 PM IST

மீன்பிடி தடைகாலம் நடந்து வரும் நிலையில் பாம்பனில் விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து சாதனங்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ராமேசுவரம்,

மீன்பிடி தடைகாலம் நடந்து வரும் நிலையில் பாம்பனில் விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து சாதனங்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மீன்பிடிக்க தடை

தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் இனப்பெருக்க காலமாக உள்ளதால் 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது போல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை தொடங்கியது.

இதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பல ஊர்களில் மீனவர்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விலை அதிகரிப்பு

இது பற்றி பாம்பனை சேர்ந்த மீனவர்கள் ராயப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியோர் கூறும்போது:-

இந்த ஆண்டு படகை கரையில் ஏற்றும் செலவு, பெயிண்ட், மீன்பிடி வலை, படகுகளுக்கான அனைத்து உபகரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. குறிப்பாக மராமத்து பணிக்காக கடலில் இருந்து படகை கரையில் ஏற்றி வைக்க ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.20 லிட்டர் அளவு கொண்ட ஒரு பெயிண்ட் டப்பாவின் விலை ரூ 4,000 ஆக இருந்தது தற்போது ரூ.8500 வரை விலை உயர்ந்துள்ளது. படகை வேலை பார்க்கும் ஆசாரி கூலி ரூ.1000-த்தில் இருந்து ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. அதுபோல் ஒரு கிலோ மீன் பிடி வலை ரூ.300 ஆக இருந்தது. தற்போது ரூ.445 ஆக விலை உயர்ந்துள்ளது. இந்த தடை காலத்தில் ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி அனைத்து சீரமைப்பு பணிகளையும் செய்து மீண்டும் கடலில் இறக்க மொத்த செலவு ரூ.8 லட்சம் வரையிலும் வந்துள்ளது. படகு பராமரிக்க விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு உள்ளோம். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும்போது எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்