ஆம்னி பஸ்சில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
|விருதுநகரில் இருந்து கோவைக்கு செல்ல ஐ.டி. பெண் ஊழியர் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
கோவை,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில் இருந்து கோவைக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
அவர், கடந்த 28-ந் தேதி இரவு விருதுநகரில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். மறுநாள் காலையில் அந்த பஸ் கோவை காந்திபுரத்திற்கு வந்தது. அதில் இருந்து ஒவ்வொரு பயணிகளாக கீழே இறங்கி கொண்டிருந்தனர். ஐ.டி. பெண் ஊழியரும் தனது உடைமைகளை எடுத்து கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றார்.
அப்போது பஸ்சில் கிளீனராக பணிபுரியும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் என்ற சுபாஸ் சந்திரபோஸ்(41), ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அப்போது அவரை அழைத்து செல்வதற்காக வந்திருந்த அவரது உறவினர்கள் மற்றும் சக பயணிகளும் அந்த கிளீனரை கண்டித்தனர்.
மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.