தூத்துக்குடி
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
|நாசரேத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாசரேத் ஏதேன் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் சாம் ஜெபராஜ் (வயது 28). இவரும், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் ஆழியார்தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் முரளி ( 49) என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களை நாசரேத் ரெயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் நிறுத்திவிட்டு நெல்லை சென்றுள்ளனர். அங்கிருந்து மாலையில் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்த நிலையில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மாநாட்டூர் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை வழிமறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், நாசரேத் அருகே உள்ள பிடாநேரி பேச்சிமுத்து மகன் அமெச்சார் (33), நாசரேத் இம்மானுவேல் தெரு மோசஸ் மகன் யோவான் (47) ஆகியோர் என்றும், அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என தெரிய வந்தது. அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர்.