தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது - மக்கள் நீதி மய்யம்
|தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயில், சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய பாடத் திட்டத்தை கட்டமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் சர்வேயில் (கருத்துக் கேட்பு) மத்திய அரசு சமஸ்கிருதத்தை வலிந்து திணித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏற்க மறுத்துள்ளன. மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேசிய அளவிலான பாடத் திட்டத்தை (National Curriculam Framework) உருவாக்குவதற்காக 23 மொழிகளில் டிஜிட்டல் சர்வே ஒன்று நடத்தப்படுகிறது. இதற்காக, பிரத்யேக இணையதளம் (https://disanc.ncert.gov.in) மற்றும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், சமூகநல ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், பல்துறை வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினருக்காக ஆழமான, துடிப்பான, ஆற்றல்மிக்க பாடத்திட்டத்தை உருவாக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வேயில், பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய மொழிகள், அவர்களின் முழுமையான வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு, 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்தெல்லாம் 10 கேள்விகள் உள்ளன. அவற்றுக்கான பதில்களையும் குறிப்பிட்டு, அதில் விரும்பியதை தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், "1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் எந்தெந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வி உள்ளது. அதற்கு, தாய்மொழி, உள்நாட்டு மொழி, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி, ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி என பல்வேறு பதில்கள் தரப்பட்டுள்ளன. இதில், "சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் (1-ம் வகுப்பு முதல்)" என்றும் ஒரு பதில் தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியின் பெயருமே இதில் குறிப்பிடப்படாத சூழலில், சமஸ்கிருதத்தை மட்டும் இதில் வலிந்து திணித்துள்ளனர்.
மக்களிடம் அதிகம் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு ஏற்கெனவே மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது (தேசிய கல்விக்கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோதும், சமஸ்கிருதத்திற்கு அதில் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது). செம்மொழியான தமிழ்மொழி மேம்பாட்டுக்கு மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படும் சூழலில், சமஸ்கிருதத்துக்கு பல மடங்கு நிதி ஒதுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்நிலையில், தேசிய பாடத் திட்டக் கட்டமைப்புக்கான டிஜிட்டல் சர்வேயிலும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பது, மத்திய அரசின் ஒரவஞ்சனையையே காட்டுகிறது. இந்தியாவில் தமிழ் உட்பட பலமொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் "சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள்" என்று குறிப்பிடுவது ஏதேச்சையாக நடந்த ஒன்றாகக் கருத முடியாது. சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும் முயற்சியே இது!
இந்த அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக டிஜிட்டல் சர்வேயிலிருந்து சமஸ்கிருத மொழி குறித்த குறிப்பை நீக்க வேண்டும். ஒன்று, செம்மொழிகள் என்று பொதுவாகக் குறிப்பிடலாம். அல்லது, அனைத்து செம்மொழிகளையும் பட்டியலிட்டுக் காட்டலாம். இரண்டையும் விடுத்து, "சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள்" என்று குறிப்பிடுவதை ஏற்க இயலாது. தொடர்ந்து இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.