நாமக்கல்
நாமக்கல்லில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
|நாமக்கல்லில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்லில் நேற்று தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெண்கள் கவலை அடைந்தனர்.
தக்காளி விளைச்சல் இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விளைச்சல் போதிய அளவுக்கு இல்லை. எனவே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தக்காளியை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் 4 கிலோ ரூ.100 என்கிற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
கிலோ ரூ.100-க்கு விற்பனை
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து நாமக்கல்லுக்கு லாரிகளில் வரும் 27 கிலோ கொண்ட தக்காளி பெட்டியை வியாபாரிகள் ரூ.2,200 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கும் தக்காளியை கிலோ ரூ.100 வரை விலை வைத்து, பொதுமக்களிடம் விற்பனை செய்கிறார்கள். பெண்களும் வேறு வழியின்றி வாங்கி செல்கின்றனர். இருப்பினும் தக்காளி விலை அதிகரித்து இருப்பதால், அவற்றின் விற்பனை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் உழவர் சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி விற்பனைக்கு வருவது இல்லை. இருப்பினும் அதிகாரிகள் நேற்று முன்தினம் கிலோ ரூ.80 எனவும், நேற்று கிலோ ரூ.70 எனவும் விலை நிர்ணயம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதால், பெண்கள் கவலை அடைந்து உள்ளனர்.