அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது - விஜய்வசந்த்
|நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசியபோது கூறியதாவது:-
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சிக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று ராகுல் காந்தி கூறினார். தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
இதே போல தற்போது அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தற்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது. ராகுல்காந்தியை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் அலைக்கழிப்பு செய்தது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும் என அவர் கூறினார்.