நாகப்பட்டினம்
நாகையில், பூக்கள் விலை இருமடங்கு உயர்வு
|நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு நாகையில் பூக்கள் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு நாகையில் பூக்கள் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
நேதாஜி பூ மார்க்கெட்
நாகை பழைய பஸ் நிலையம் அருகே நேதாஜி பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. ஓசூர், திருச்சி, திண்டுக்கல், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த மார்க்கெட்டில் முல்லை, கிரேந்தி, செவ்வந்தி, சம்பங்கி, கனகாம்பரம், அரும்பு, மல்லி, ரோஜா உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 5 முதல் 6 டன் வரை இங்கு விற்பனைக்காக பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வரப்படுகிறது. மல்லி, முல்லை, கனகாம்பரம் பூக்களைத் தவிர மற்ற அனைத்து பூக்களும் ஓசூரில் இருந்து நாகைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆயுத பூஜை
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் நாகையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாகை மார்க்கெட்டில் பூக்கள் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
விலை நிலவரம்
கடந்த வாரம் ரூ.400-க்கு விற்பனை செய்த 1 கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூ.150-க்கு விற்ற சம்பங்கிப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், ரூ.150-க்கு விற்ற ரோஜா ரூ.200-க்கும் விற்பனையானது.
விலையை பொருட்படுத்தவில்லை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை கடந்த 15-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக நவராத்திரி தொடங்கிய நாளில் இருந்தே நாகையில் பூக்களின் விலை ஏறுமுகமாக காணப்பட்டது. பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தேவைக்கேற்ப வாங்கி செல்கின்றனர் என வியாபாரிகள் தெரிவித்தனர்.