< Back
மாநில செய்திகள்
நாகையில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:30 AM IST

நாகையில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

நாகையில் மத்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

அதிவிரைவுப் படை

கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) 60 பேர் துணை கமாண்டர் ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் மோகன்லால் முன்னிலையில் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து முகாமிட்டனர்.

இதையடுத்து நாகையில் பதற்றமான பகுதிகள் எவை? சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்த தகவல்களை துணை கமாண்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் கேட்டறிந்தார்.

துப்பாக்கி ஏந்தி அணி வகுப்பு

தொடர்ந்து நாகை டவுன் மற்றும் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்தியபடி மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உள்ளூர் போலீசாரும், மத்திய அதிவிரைவு படையினருடன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர். நாகை நகரில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்தியபடி மத்திய அதிவிரைவுபடையினர் அணி வகுப்பு நடத்தினர்.

கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம் மற்றும் நவீன கருவிகளுடன் அணிவகுப்பு நடந்தது. மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள் மற்றும் பதற்றமான பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு நடத்த உள்ளனர். இதுதொடர்பான ஆய்வறிக்கை தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கலவரத்தை எளிதாக கட்டுப்படுத்த...

கலவரங்களை மாநில போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், மத்திய அதிவிரைவு படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி கலவரத்தை எளிதாக கட்டுப்படுத்துவது எப்படி? பதற்றமான பகுதிகள் எவை? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அதிவிரைவு படை துணை கமாண்டர் ராஜேஷ் தெரிவித்தார். அப்போது இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்