< Back
மாநில செய்திகள்
நாகையில், கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்

தினத்தந்தி
|
25 Sept 2022 12:15 AM IST

நவராத்திரி விழாவை முன்னிட்டு நாகையில், கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பொம்மை ரூ.50 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது.


நவராத்திரி விழாவை முன்னிட்டு நாகையில், கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு பொம்மை ரூ.50 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது.

நவராத்திரி விழா

நவராத்திரி விழா இந்துக்களின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு மகா சிவராத்திரி போல் ஆதிபராசக்திக்கு புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உகந்ததாகும். பண்டகாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கினான்.

அவனை அழிக்க தேவி 9 இரவுகளில் வெவ்வேறு உருவங்களை கொண்டு போரிட்டு 10-வது நாள் அசுரனை வதம் செய்தார். தேவி அசுரனை அழிக்க போராடிய இந்த 9 ராத்திரிகளே நவராத்திரி என்றும், அசுரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொலு பொம்மைகள்

அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி அன்று தங்கள் வீடுகளில் 9 படிகளில் பல விதமான சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலுவாகும்.

இதில் கிருஷ்ணர், முருகன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் பொம்மைகள் வைக்கப்படும். நவராத்திரி விழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோவில்களில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

விற்பனை மும்முரம்

நவராத்திரி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாகை புத்தூர் ரவுண்டானாவில் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர்கள் கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தயார் செய்யப்பட்ட பொம்மைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

கொலு பொம்மைகளை களி மண்ணாலும், காகித கூழ் மூலமாகவும் தயாரிக்கின்றோம். சரஸ்வதி, ராமர், சீதை, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், பெருமாள், விநாயகர், சாய்பாபா, லட்சுமி என 50-க்கும் மேற்பட்ட சாமி பொம்மைகளை தயாரிக்கிறோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

வெளியூருக்கு ஏற்றுமதி

நாங்கள் தயாரிக்கும் கொலு பொம்மைகளை உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். முன்பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் பொம்மைகள் தயார் செய்து அனுப்பி வருகிறோம். ரூ.50 முதல் ரூ.550 வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்