நாகப்பட்டினம்
நாகையில், கோலப்பொடி விற்பனை மும்முரம்
|நாகையில், கோலப்பொடி விற்பனை மும்முரம்
மார்கழி மாதத்தையொட்டி பெண்கள் அதிகாலையில் வீடுகளின் முன் கோலமிடுவது வழக்கம். கோலத்தில் சாணத்தினாலான பிள்ளையார் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி நாகை மாவட்டத்தில் வீடுகள் முன்பு பெண்கள் விதவிதமான கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு நடத்தினர். விதவிதமான கண்களை கவரும் வகையில் கோலங்கள் போடுவதால் வண்ண கோலப்பொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி நாகை கடை தெருவில் கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து விற்பனைக்காக வந்த வண்ண வண்ண கோலப்பொடிகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுதவிர நாகை நீலா வீதிகள், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து கோலப்பொடி விற்பனை செய்யப்படுகிறது. கலர் கோலப்பொடிகள் சிறிய பாக்கெட் ரூ.5-க்கும், பெரிய பாக்கெட் 30-க்கும், வெள்ளை கோலப்பொடி பாக்கெட்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.