நாகப்பட்டினம்
நாகையில், ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை
|நாகை கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. விற்பனையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. விற்பனையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நித்தியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.9 ஆயிரத்து 150 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளையும், வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நாகரெத்தினம் மற்றும் நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோருக்கு தலா ரூ.13 ஆயிரத்து 459 மதிப்பிலான செல்போன்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
தக்காளி விற்பனை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகை நகராட்சி பகுதியில் உள்ள மிகவும் பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முதல் தவணையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கான விற்பனையினை கலெக்டர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாய்க்கால் தூர்வார வேண்டும்
கூட்டத்தில் மேல உதயத்தூரை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் உள்ள நீலப்பாடி சட்ரசில் இருந்து பிரியக்கூடிய மேல உதயத்தூர் வாய்க்கால் 2 கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வயல் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது.
இதனால் 200 ஏக்கர் சாகுபடி பணிகளை செய்ய முடியாமல், கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே 2 கிலோமீட்டர் மேல உதயத்தூர் வாய்க்காலை தூர்வாரி பாசன வசதி பெற்று தர வேண்டும்.
வீடுகளை மறுசீரமைப்பு செய்ய..
இதேபோல் நரிக்குறவர்கள் குடும்பத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- மேல வாஞ்சூர் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நரிக்குறவர்களுக்கு சுனாமி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
விளிம்பு நிலையில் உள்ள எங்களது வீடுகளை மறுசீரமைப்பு செய்ய யாரும் முன் வரவில்லை. இதுகுறித்து பலமுறை அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது சுனாமி குடியிருப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.